Sunday, March 21, 2021

ஜென் பற்றி - புத்தர்

 ’ஜென்’ பற்றி புத்தர் கீழ்கண்டவாறு கூறுகிறார்....

“ அரசர்களையும் ஆட்சியாளர்களையும் நான் தூசிக் குவியலாகப் பார்க்கிறேன். தங்கம் மற்றும் நவரத்தினங்கள் உள்ளிட்ட செல்வங்களை நான் செங்கற்களாகவும் கூழாங்கற்களாகவும் பார்க்கிறேன். உயர்ந்த பட்டாடைகளை நான் கிழிந்த ஆடைகளாகப் பார்க்கிறேன். பிரபஞ்சத்தின் ஏழுலகங்களை பழங்களின் விதைகளாகவும், இந்தியாவின் மிகப் பெரிய ஏரியை காலடியில் இருக்கும் ஒரு துளி எண்ணையாகவும், உலகத்திலிருக்கும் போதனைகளை வித்தைக்காரர்களின் கண்கட்டு வேலையாகக் கருதுகிறேன்.

விடுதலையின் தத்துவத்தைக் கனவில் வரும் தங்க ஆடையாகவும், ஞானிகள் சொல்லும் புனித வழியை கண்ணில் தோன்றும் மலர்களாகவும் பார்க்கிறேன். தியானத்தை மலையின் தூணாகவும், ஆத்மாக்களின் ஐக்கியத்தை பகல் கனவாகவும் பார்க்கிறேன். சரி என்றும் தவறென்றும் தீர்மானங்கள் எடுப்பது பாம்பு நெளியும் திசைகளை தீர்ப்புக்கு உள்ளாக்குவது போன்றது.  நம்பிக்கைகளின் வெற்றியையும் தோல்வியையும் மாறி வரும் பருவங்கள் விட்டுச் சென்ற நினைவுத் துளிகளாகப் பார்க்கிறேன்.”


மேற்சொன்னது பற்றி நூலாசிரியரின் கருத்து : 

“ உன்னை நம்பு. நிகழ்காலத்தில் வாழ். மனத்தை எப்போதும் காலியாக வைத்திரு. எதைக் கண்டும் அஞ்சாதே”

மூலம் -- கதைகளின் வழியே ஜென்.  ஆசிரியர். கே.ஜி. ஜவர்லால் (கிழக்குப் பதிப்பகம்)


Tuesday, March 16, 2021

குறளோவியத்தில் “திருவள்ளுவர்” - கலைஞர் கருணாநிதி

 1956-ல் கலைஞர் எழுதிய “குறளோவியம்” உலகப் பொதுமறை தந்த வள்ளுவப் பெருந்தகையினைப் பற்றிய சில குறிப்புகளை கீழ்கண்டவாறு பதிவு செய்கிறது.


                   ”திருவள்ளுவப் பெருந்தகையாரின் திருவுருவத்தை நாம் கண்டதில்லை. தமிழகம், தனது சரித்திரத்தையும் தன் புகழ்பாடிய பெரும் புலவர்கள் பற்றிய விவரங்களையும் தன்னகத்தே கொண்டிராத பெருங்குறையால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்றுதான், திருவள்ளுவரின் உருவம் நமக்குக் கிடைக்காது போனதாகும். அவர் யாத்தளித்த திருக்குறள் நூல்தான் அவரது திருவுருவமெனக் கொள்ள வேண்டும் என்பர் பெரியோர்.

                        இந்நாள் போன்று அந்நாளில் விஞ்ஞானப் பெருக்கு மிகுந்திருக்குமேயாயின் ரஷ்ய மண்டலத்திலே லெனின் உடலைக் காத்திடும் செஞ்சதுக்கம் போன்று நமது வள்ளுவனுருக்காக அமைக்கப்பட்டிருக்கும். அது நிற்க, இற்றை நாளில் இதுதான் வள்ளுவரின் உருவமென பரிமேழலகரின் பரம்பரையினர் எழுதிக் காட்டும் படங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடியன அல்ல என்பதை அறிதல் வேண்டும். பூணூல் என எண்ணிடும் வகையிலே மார்பிலே குறுக்கு அணி பூட்டிக் காட்டுகிறார்கள். தவ சிரேட்டரின் கோலத்திலே உட்கார வைத்து இவரே வள்ளுவர் எனப் பறை அடிக்கிறார்கள். சடாமுடிகள் சகிதம் வள்ளுவப் பெருந்தகையாரை வரைந்து காட்டுகிறார்கள். 

                        வள்ளுவர் சடாமுடிகள் வைத்திருக்கவில்லை என்பதை வள்ளுவர் எழுதிய குறள் பாட்டே தெரிவிக்கிறது...”

                ’மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

                பழித்தது ஒழித்து விடின்’ என்பது குறள்.

ஆக, திருவள்ளுவரை தன்வயப்படுத்திட முனையும் இத்தகு செயல்கள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நடந்தேறி வருகிறது என்பது இதனால் திண்ணம்.

Sunday, February 28, 2021

புத்தக வாசிப்பு - விவரங்கள்

              இம்மாதம் 20ம் திகதி முதல் வாசித்த புத்தகங்களின் விவரங்கள்.

வாசித்த புத்தகங்கள்


Friday, February 26, 2021

தமிழகத்தில் காந்தியும், இந்தியும்....

 சுமார் எழுபது (70) வருடங்களுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் “இந்தி பிரச்சார சபா”  செயல்பட்டு வருவதாயும்,  தியாகராய் நகரில் சபா ஏற்பாடு செய்திருந்த பிரமாண்ட கூட்டத்தில் காந்தி கலந்து கொண்டதாயும் தம் புத்தகம் ஒன்றில் குறிப்பிடுகிறார் கல்கி “சாவி” அவர்கள்.

குறிப்பாய், தியாகராய நகரின் தென் கிழக்குப் பிரதேசத்துக்கு “ஹிந்துஸ்தானி நகரம்” என்று நாமம் சூட்டியிருக்கிறார்கள் என்று புளகாங்கிதம் அடைகிறார். அப்படியொரு பகுதி இன்றும் அத்தகு பெயரில் அங்கு உண்டா?

காந்தி பேசியதாய் கல்கி “சாவி” குறிப்பிடுவது,

”மனிதனுக்குப் பிராணவாயு எவ்வளவு அத்தியாவசியமோ, அதைப் போல இந்திய மக்களுக்கு ஹிந்துஸ்தானி பாஷையும் அவசியமாகும். ஹிந்துஸ்தானி கற்பதை ஒரு முக்கிய தர்மமாகக் கருத வேண்டும். ஹிந்துஸ்தானி மிகவும் சுலபமான பாஷை. புத்திசாலிகளான தென்னிந்தியர்களுக்கு ஹிந்தி கற்பது ஒரு பிரமாதமான காரியமல்ல”

[மூலம் : நவகாளி யாத்திரை - ஆசிரியர் சாவி]

அண்ணல் சொல்வது யாதெனில், ஹிந்தி பிராணவாயுவாம், மற்ற பிராந்திய மொழிகள் எல்லாம் என்னவாம்?. கவனியுங்கள் “தென்னிந்தியர்கள் புத்திசாலிகளாம்”, நயந்து பேச்சால் ஹிந்தி திணிப்போ?.

இன்று, வடக்கர்கள் தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டி நமக்கு பூச்சாண்டி காண்பிக்கிறார்கள், அவ்வளவே!!! 


Thursday, February 25, 2021

காந்தியின் பிரம்மசரியமும், காட்டில் ஜிலேபியும்...

  சுதந்திரத்திரத்திற்கு பிறகு 1948 காலக் கட்டத்தில் நவகாளி கலவரத்திற்குப் பின் அங்கு யாத்திரையில் ஈடுபட்டிருந்த காந்தியின் பிரயாணத்தில் இரு தினங்கள் கல்கி “சாவி” கலந்து கொண்டு, அது குறித்து எழுதிய கட்டுரைத் தொகுப்பிலிருந்து.....

என்னுடைய அந்தரங்க வாழ்க்கையில் சந்தேகம் கொண்ட ஒருவர் என்னுடைய பிரம்மசரிய வாழ்க்கையில் அவநம்பிக்கை தெரிவித்திருக்கிறார். நான் எப்போதும் ஸ்திரீகளுடன்  நெருங்கிப் பழகுகிறேன் என்றும், அதனால் சந்தேகமாயிருக்கிறதென்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். இவரைப் போலவே இன்னும் சிலரும் என் மீது சந்தேகம் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். எனக்கு அந்தரங்கம் என்பது எதுவும் கிடையாததாகையால், இந்தச் சந்தேகத்தைப் போக்க வேண்டியது எனது கடமை”

“ கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நான் பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்து வருகிறேன். ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டு வருகிறேன்.  நாவுக்கு ருசியான பண்டங்களைச் சாப்பிடுவது கிடையாது. உயிர் வாழ்வதற்கு எவ்வளவு ஆகாரம் அவசியமோ, அதைவிடக் குறைவாகவே சாப்பிட்டு வருகிறேன். என்னுடன் எந்த நேரமும் பெண்கள் இருந்து வருவது உண்மையே. பெண்களின் அருகிலேயே இருந்தும் பிரம்மசரியத்தைக் காப்பது தான் உண்மை யோகியின் லட்சணம்.

”காட்டிலேயே உள்ள ஒருவன் ’ நான் ஜிலேபி சாப்பிடுவது கிடையாது’ என்றால் அதில் ஆச்சரியம் கிடையாது. ஏனெனில், காட்டிலே ஜிலேபி கிடைக்காது. ஆகையால், கிடைக்காத ஒரு பொருளைச் சாப்பிடுவதில்லை என்று சொல்லுவது ஆச்சரியமாகாது. அதைப் போலவே, பெண்களின் மத்தியில் இருந்து கொண்டு பிரம்மசரிய வாழ்க்கையில் வெற்றி பெறுவது தான் உண்மையான வெற்றியாகும். இந்தப் பரீட்சையில் நான் பரிபூரண வெற்றி அடைந்திருக்கிறேன் என்று சத்தியமாகக் கூறுகிறேன்.”

[மூலம் : நவகாளி யாத்திரை - ஆசிரியர் சாவி]

Sunday, February 21, 2021

அறிவோம் தமிழ் - புதிய சொற்கள்

 இன்று கவிஞர் வாலி “கலைஞரை” பற்றி புனைந்த கவிதைகள் புத்தகம் (136 பக்) படிக்க நேர்ந்தது. அவற்றில் கவிஞர் கையாண்ட சில வார்த்தைகளும் அதன் பொருளும். இவை எமக்குப் புதிது!!! உமக்கு??


            புதிய சொற்கள்                                 பொருள்

  1. மதலை                                                        மகன் (குழந்தை)
  2. குதலை                                                       குழந்தை மொழி (மழலை)
  3. மன்பதை                                                   மனிதகுலம்
  4. ஒக்கல்                                                         இடுப்பு
  5. கஞ்சுகம்                                                    அங்கி/சட்டை
  6. குப்பாயம்                                                 சட்டை / கவசம் போன்ற உடை
  7. சீயம்                                                            வெல்லத்தால் செய்யப்படும் இனிப்பு
  8. தகவு                                                            பெருமை
  9. பரல்                                                             விதை
  10. இமிழ்                                                           தழை
                        

நன்முறையில் சொல்வது/எழுதுவது எவ்வாறு - நன்னூல் கூறும் அறிவுரைகள்

கீழ்காணும் குற்றங்கள் களைந்து எழுதுதலே ‘எவற்றையும் நன்முறையில் எழுதும்/சொல்லும் முறை’ என நன்னூல் கூறுகிறது.

குன்றக் கூறல் மிகைபடக் கூறல்

கூறியது கூறல் மாறுகொளக் கூறல்

                    வழூஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல்

                    வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல்

                    சென்றுதேய்ந் திறுதல் நின்றுபயன் இன்மை

                    என்றிவை ஈரைங் குற்றம் நூற்கே. நன்னூல் 12 

இதன் பொருள் விரிக்க,

  1. குறைவுபடக் கூறுதல்
  2. மிகைப்படக் கூறுதல்
  3. கூறியவற்றையே கூறுதல் (திரும்பத் திரும்ப கூறுதல்)
  4. கூறியவற்றை முரணாகக் கூறுதல்
  5. சொல்லியவற்றில் குற்றமிருக்கக் கூறுதல் (சொற்குற்றம், பொருட்குற்றம்)
  6. மயக்கத்தோடு கூறுதல் (உ.தா. பொருள் தெளிவற்ற மயக்கம்)
  7. வெற்றுச் சொற்களாய் தொடுத்து அலங்காரமாய் கூறுதல்
  8. ஒரு பொருள்படத் துவங்கி மற்றொரு பொருள்படக் கூறுதல்
  9. ஆரம்பம் விரிவாயும் பின் தேய்மானமாயும் முடித்தல்
  10. எப்பொருள் பயனும் இன்றி கூறுதல்