1956-ல் கலைஞர் எழுதிய “குறளோவியம்” உலகப் பொதுமறை தந்த வள்ளுவப் பெருந்தகையினைப் பற்றிய சில குறிப்புகளை கீழ்கண்டவாறு பதிவு செய்கிறது.
”திருவள்ளுவப் பெருந்தகையாரின் திருவுருவத்தை நாம் கண்டதில்லை. தமிழகம், தனது சரித்திரத்தையும் தன் புகழ்பாடிய பெரும் புலவர்கள் பற்றிய விவரங்களையும் தன்னகத்தே கொண்டிராத பெருங்குறையால் ஏற்பட்ட விளைவுகளில் ஒன்றுதான், திருவள்ளுவரின் உருவம் நமக்குக் கிடைக்காது போனதாகும். அவர் யாத்தளித்த திருக்குறள் நூல்தான் அவரது திருவுருவமெனக் கொள்ள வேண்டும் என்பர் பெரியோர்.
இந்நாள் போன்று அந்நாளில் விஞ்ஞானப் பெருக்கு மிகுந்திருக்குமேயாயின் ரஷ்ய மண்டலத்திலே லெனின் உடலைக் காத்திடும் செஞ்சதுக்கம் போன்று நமது வள்ளுவனுருக்காக அமைக்கப்பட்டிருக்கும். அது நிற்க, இற்றை நாளில் இதுதான் வள்ளுவரின் உருவமென பரிமேழலகரின் பரம்பரையினர் எழுதிக் காட்டும் படங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடியன அல்ல என்பதை அறிதல் வேண்டும். பூணூல் என எண்ணிடும் வகையிலே மார்பிலே குறுக்கு அணி பூட்டிக் காட்டுகிறார்கள். தவ சிரேட்டரின் கோலத்திலே உட்கார வைத்து இவரே வள்ளுவர் எனப் பறை அடிக்கிறார்கள். சடாமுடிகள் சகிதம் வள்ளுவப் பெருந்தகையாரை வரைந்து காட்டுகிறார்கள்.
வள்ளுவர் சடாமுடிகள் வைத்திருக்கவில்லை என்பதை வள்ளுவர் எழுதிய குறள் பாட்டே தெரிவிக்கிறது...”
’மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்’ என்பது குறள்.
ஆக, திருவள்ளுவரை தன்வயப்படுத்திட முனையும் இத்தகு செயல்கள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நடந்தேறி வருகிறது என்பது இதனால் திண்ணம்.
No comments:
Post a Comment