இனப்பகை உருவாகும்?
சிங்கள அரசு தமிழீழத்தில் நடத்திவரும் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தக்கோரி, தமிழகத் தின் பல்வேறு பிரிவு மக்களும் பல வகையான போராட் டங்களின் மூலம் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க., காங்கிரஸ் தவிர்த்துத் தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றுபட்டுப் போர்நிறுத்தம் கோரியதோடு மட்டுமின்றி, தமிழக சட்ட மன்றமே இது தொடர்பாக இரு முறை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதுடன், தற்போது 'ஐயகோ' தீர்மானத்தையும் அனுப்பியிருக்கிறது!
இவ்வளவுக்குப் பின்னும், போர்நிறுத்தப் போக்கில் டெல்லி அரசு எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை; சிங்கள அரசுக்கு அளித்துவந்த ராணுவ உதவிகளையும் படைப் பயிற்சிகளையும் நிறுத்த வில்லை.
இதற்குக் காரணம், டெல்லி அரசின் அயலுறவுக் கொள்கையும் அது சார்ந்த இலங்கையுடனான இந்திய அரசின் அணுகுமுறையும்தான். இந்த அணுகுமுறையை மாற்றியமைக்கக் கூடிய வகையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒற்றுமையின்றித் தங்களுக்குள்ளே போட்டி போட்டுக்கொண்டு டெல்லி அரசுக்குக் காவடி தூக்குவது என்பது பலரும் அறிந்த செய்தி.
இதனால்தான் போரை நிறுத்த முன்வராத டெல்லி அரசு, வாரக்கட்டளை போல் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படும்போது, அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை!
மொத்தத்தில், தன் சொந்த நாட்டில் உள்ள ஆறரை கோடித் தமிழர்களைப் பற்றிக் கவலைப்படாமல்... அவர் களுடைய உணர்வுகளை மதிக்காமல்... தன் ஆதிக்க நலனுக்காக அண்டை நாட்டில் உள்ள ஒன்றரை கோடி சிங்களவருக்கு அடியாள் சேவகம் செய்வதையே தன் கொள்கையாகக்கொண்டு இயங்கி வருகிறது டெல்லி அரசு.
இப்படிப்பட்ட சூழலில் தமிழக மக்களின் மனநிலை, அவர்களின் கொதிநிலை எப்படிப்பட்டதாக இருக்கும்... இருக்கிறது?
ஊர் உலகமெல்லாம் இதுபோன்று உரிமைகளுக்காகப் போராடிய மக்களுக்கு நாம் எவ்வளவோ உதவினோம். ஆனால், நம் கண்ணெதிரில் கூப்பிடு தூரத்தில் வதை படும் தொப்புள்கொடி உறவுகளுக்கு எந்த வகையிலும் உதவி செய்ய முடியாமல் கைகளும் கட்டப்பட்டு, வாய்ப்பூட்டும் போடப்பட்டவர்களாக இருக்கிறோமே என்கிற ஆதங்கம், வேதனை தமிழக மக்களிடையே நிலவுகிறது.
போராடும் மக்களுக்கு, டெல்லி அரசு தானாகவும் எதுவும் செய்யாமல்... தங்களையும் எதுவும் செய்ய விடாமல்... சிங்கள அரசின் கொலை பாதகச் செய லுக்குத் துணை போகிறதே என்கிற மனக்குமுறலும், இம்மனக்குமுறலில் தமிழகம் இறையாண்மை மிக்க ஒரு தேசமாக, தனக்கென்று சுதந்திரமான அரசமைப்புச் சட்டமும் படையும்கொண்ட ஒரு நாடாக இருந்திருந்தால், இந்நேரம் ஈழ மக்களுக்கு நம் விருப்பம் போல் உதவலாமே... தமிழக மீனவர்களையும் காப்பாற்றலாமே என்கிற ஆதங்கமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, டெல்லி அரசு இதை கவனத்தில்கொண்டு சும்மா மேம்போக்காக இதை 'தேசத்துரோகம்', 'பிரிவினை வாதம்' என்று குற்றம்சாட்ட முயலாமல்... இதற்கான வித்து எது, எங்கிருந்து இவ்வுணர்வுகள் உதிக்கின்றன என்பதைக் கண்டறிந்து, அதைக் களைய முற்படவேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.
இலங்கை இனவெறி அரசை முழு மூச்சோடு ஆதரிக் கும் இந்தியா, இலங்கையில் ஈழத்தின் வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பார்த்து, சில செய்திகளைப் புரிந்துகொள்ள வேண்டும். 1948-ல் அதிகாரம் கைக்கு வரப்பெற்ற சிங்களர்கள் படிப்படியான நடவடிக்கைகள் மூலம் தமிழின ஒடுக்குமுறையை மேற்கொண்டு, 1970-ல் தரப்படுத்தல் திட்டம் கொண்டுவந்து தமிழக இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பைப் பறித்தபோது தொடங்கப்பட்டதுதான் 'தமிழ் மாணவர் பேரவை.'
அவ்வமைப்பு அமைதி வழியில் நடத்திய பல போராட் டங்களை சிங்கள அரசு ஆயுதப்படை கொண்டு குரூரமாக ஒடுக்கியதன் விளைவாக, அம்மாணவர்களிலிருந்து பதிலுக்கு ஆயுதம் ஏந்திப் போராடுவதைத் தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்கிற முடிவில் தோற்றம் பெற்றவைதான் போராளி அமைப்புகள்.
இன்று அப்போராளிகள் அமைப்பை ஒடுக்க இலங்கை அரசுக்கு டெல்லி அரசு உதவலாம். தற்காலிகமாக அதில் வெற்றியும் பெறலாம். ஆனால் போராளிகளை, போராட்ட உணர்வை முற்றிலுமாக ஒழித்துவிட முடியாது என்பது தெளிவு. காரணம், போராட்டங்களுக்கான புறக்காரணங்கள் நிலவும் வரை... அது ஏதாவதொரு வடிவில் மீண்டும் மீண்டும் புத்துயிர் பெற்று எழும், தொடரும் என்பதே அறிவியல்.
எனவே, தமிழீழ விடுதலைப் போராட் டத்தை முற்றாக அழித்தொழித்துவிட முடியாது. இந்திய அரசு இன்று இலங்கை அரசுக்குச் செய்துவரும் உதவிகளுக்காக, இலங்கை அரசு என்றென் றைக்கும் டெல்லிக்கு விசுவாசமாகவே இருந்து விடாது. மாறாக, அது எப்போது வேண்டுமானாலும் பாகிஸ் தானோடோ, சீனாவோடோ கைகோத்து இந்தியாவை எதிர்க்கும் என்பதையும் டெல்லி ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
டெல்லி அரசின் மெத்தனப் போக்கால், 'தமிழகமும் தமிழக மக்களும் இந்தியாவின் ஓர் அங்கமா இல்லையா? நம் உணர்வுகளை மதிக்காமல் டெல்லி ஏன் இப்படி இனப் பகையோடு நடந்துகொள்கிறது? ஒருவேளை தமிழகமோ, தமிழர்களோ இந்தியாவில் வேண்டாம் என்று டெல்லி அரசு கருதுகிறதா?' என்பது போன்ற சந்தேகங்களும் இப்போது தமிழ் மக்களிடையே எழுந்திருப்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
'பிற மாநில மக்களுக்கெல்லாம் ஏதாவது பாதிப்பு என்றால் உடனுக்குடன் தலையிடும் டெல்லி, தமிழர் பிரச்னை என்றால் மட்டும் - அது நதிநீர்ப் பிரச்னையோ வேறு எதுவோ - மெத்தனமாக இருக்கிறதே... அல்லது எதிராகவே செயல்படுகிறதே' என்கிற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
இந்த உணர்வை அலட்சியப்படுத்தினால், காலப்போக்கில் இது, டெல்லி அரசின்பால் என்றென் றைக்கும் மாறாத, காயம் ஆறினா லும் வடு மறையாத தீராத இனப்பகையை உருவாக்கிவிடும். இது தமிழர் களை டெல்லிக்கு எதிராகக் கோபாவேசத்தோடு களமிறங்கிப் போராடவைக்கும்.
இப்படிப்பட்ட போராட்டங்களை வன்முறை கொண்டு ஒடுக்கிவிடலாம் என்று அரசு நினைத்தால், அந்த எண்ணம் ஈடேறாது. ஈழத்தில் அமைதி வழியில் போராடிய மக்கள், சிங்கள ஆட்சியாளர்கள் அவிழ்த்து விட்ட அடக்குமுறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டதைப் போல் தமிழர்களும் தள்ளப்படமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
எனவே, சாரமாக டெல்லிக்கு நாம் உணர்த்த விரும்புவது இதுதான்.
1. டெல்லி ஆட்சியாளர்கள் சிங்கள அரசுக்குத் தொடர்ந்து உதவி, தமிழக மக்களைப் புறக்கணித் தால்... நாளை தமிழக மக்கள் டெல்லியைப் புறக்கணிப் பார்கள்.
2. டெல்லி அரசு தமிழீழத்தில் சிங்கள அரசுக்கு ஆதரவளித்துப் போராளிகளை ஒடுக்க முயன்றால், நாளை தமிழகத்திலும் அது போன்ற போராளிகள் உருவாகித் தங்களுக்குள் ஒன்றிணைய முயல்வார்கள்.
3. டெல்லி அரசு இன்று இலங்கை இறையாண் மையைப் பற்றிக் கவலைப்பட்டால், நாளை இந்திய இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்படும் நிலை உருவாகும்.
இது ஏதோ மிரட்டலோ அச்சுறுத்தலோ மேடைப் பேச்சுகளில் கைதட்டல்களுக்காக முழங்கப்படும் வீர வசனங்களோ அல்ல. இது ஓர் அறிவியல் கோட்பாடு. உண்மை. அந்த வகையில் இது, இந்திய ஆட்சியாளர்களுக்கான அறிவுறுத்தல்.
இந்த உண்மையை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். ஏற்கெனவே வடக்கே காஷ்மீர், வடகிழக்கே நாகாலாந்து, மணிப்பூர், அஸ்ஸாம், மிசோராம், திரிபுரா முதலானவை டெல்லிக்குத் தலைவலியாக இருந்துவருகின்றன. அந்த வரிசையில் தமிழகமும் ஒரு தலைவலியாக மாறவேண்டுமா என்பதை, ஆட்சியாளர்கள் சிந்திக்கவேண்டும். இலங்கையில் ஈழம் போல், இந்தியாவிலும் ஒரு தமிழகம் உருவாவதைத் தடுக்க டெல்லி உடனடியாகப் போர்நிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்!
நன்றி : ஜூனியர் விகடன் - 15.02.2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment