Thursday, May 13, 2010

தலையங்கம்: நம்பிக்கைத் துரோகிகள்...(தினமணி தலையங்கம் உணர்திடும் உண்மை என்ன? )


தினமணி தலையங்கம் உணர்த்திடும் உண்மை என்ன?

தலையங்கம்

தலையங்கம்: நம்பிக்கைத் துரோகிகள்...


First Published : 13 May 2010 12:00:00 AM IST

Last Updated : 13 May 2010 01:14:06 AM IST

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்த போர் முடிந்து ஓராண்டு நிறைவடையும் இந்த நேரத்தில் வேறொரு விதமான தாக்குதலை தமிழர்கள் மீது தொடுத்திருக்கிறது ராஜபட்ச அரசு.தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு கெüரவமான பிரதிநிதித்துவம் அளித்துவந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையைக் கைவிடுவதற்கு இப்போதுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பதுதான் அது.இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும், தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடிக்கும் வேட்பாளரே வெற்றியாளர் என்ற தேர்தல் முறைக்கு இலங்கையும் மாறவிருக்கிறது.மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் என்ன குறை என்றே கேட்கத் தோன்றும். இந்தியாவைப் போல பல்வேறு மொழி, இன குழுக்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்றாலும் இலங்கையில் சிங்களர், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற 3 இனங்களே முக்கியமானவை. கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய கடும் உழைப்பாளிகளின் வளர்ச்சியை சிங்களர்களால் சகித்துக் கொள்ள முடியாமல் போனதால்தான் அங்கு இனப் பகையே மூண்டது.இப்போது தமிழர்களின் பகுதிகளில் சிங்களர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேகவேகமாக நடந்து வருகின்றன. அதற்காகவே இன்னமும் ஏராளமான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் விட்டுவிட்டுப் போன ஊர்களிலும் வீடுகளிலும் இப்போது சிங்களர்கள் குடியிருக்கின்றனர். விவசாயம் செய்யவும் அவர்களுக்கு நிலங்கள் தரப்படுகின்றன. இந்தப் பின்னணியில்தான் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரை வெற்றியாளராக அறிவிக்க சட்டம் திருத்தப்படுகிறது. தமிழர்களின் பகுதிகளில்கூட சிங்கள வேட்பாளர் அதிக எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறுவது என்பது இனி சாத்தியமே. சிங்களர்களைக் குடியேற்றுவதால் மட்டும் உடனடியாக இதைச் சாதிக்க முடியாது என்பதால், இப்போதுள்ள நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளையும் பிரித்து மறுவரையறை செய்யும் பணியும் தொடங்கவிருக்கிறது.அதில் தமிழர்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதி ஒரே தொகுதிக்குள் வராமல் சிங்களர்கள் பெரும்பான்மையினராக உள்ள தொகுதிகளில் பரவலாகச் சேர்க்கப்படும் முயற்சிகள் தொடங்கிவிட்டன.225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம் குறைந்துவிடுமே என்று கூறுவோருக்குப் பதில் அளிக்கவே, 25 உறுப்பினர்களைக் கொண்ட செனட் என்ற மேலவையைக் கொண்டு வரப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இதில் அறிஞர்களும்,சிறுபான்மைக் குழுக்களின் பிரதிநிதிகளும் இடம் பெறுவர் என்கிறது அரசு. இதில் அரசின் நியமன உறுப்பினர்களும் இருப்பார்கள்.என்னதான் பிரதிநிதித்துவம் தரப்பட்டாலும் இந்த அவைக்கு அதிகாரங்கள் குறைவுதான். எனவே இதில் இடம் பெறுகிறவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டாலும் கூட இந்த அவையின் அந்தஸ்து என்பது நாடாளுமன்றத்தைப் போல இல்லை என்பது வெளிப்படை.அதிபராக இருப்பவர் இருமுறைதான் அந்தப் பதவிக்கு வர முடியும் என்று இப்போதுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது, இப்போதுள்ள அதிபர் மகிந்த ராஜபட்சவை ஆயுள்கால அதிபராக்கும் முயற்சி என்றே கூறிவிடலாம்.இந்த திருத்தங்களின் நோக்கம் எல்லோருக்கும் தெரிந்த நிலையில், இனப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில்தான் இந்த நடவடிக்கைகள் என்று இலங்கை அரசு கூறுவதுதான் இரக்கமற்ற நகைச்சுவை.இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனவும் செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி இப்போது பேச்சே கிடையாது.தமிழர்களை இலங்கை மீது உரிமையுள்ள இனமாக அங்கீகரிக்கும் பேச்சோ, வடக்கும் - தெற்கும் அவர்களுடைய பாரம்பரிய தாயகம் என்பதை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மையோ, தமிழர்களின் பகுதிகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி வளப்படுத்தும் நோக்கமோ, வடக்கையும் தெற்கையும் இணைத்து தமிழர்களின் கோரிக்கைகளை முழுமையாக இல்லாவிடினும் ஆறுதல் கொள்ளும் வகையிலாவது நிறைவேற்றும் நல்லெண்ணமோ இலங்கை அரசுக்கு இல்லை என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது.இந்த நிலையில்,கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழர்களுக்கு இலங்கை அரசு எத்தகைய சலுகைகளையும் சமவாய்ப்புகளையும் இனி அளிக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.தமிழர்களைத் தங்களுடைய சகோதரர்களாக பாவிக்காமல் எதிரிகளாகவே கருதுகிறது இலங்கை அரசு என்று அதன் சில நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.ராணுவத்துடனான போரில் இறந்த வீரர்களின் சமாதிகளை வடக்கிலும் கிழக்கிலும் அமைத்த விடுதலைப் புலிகள், மாவீரர் தினத்தில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவந்தனர். இப்போது அந்தச் சமாதிகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு நினைவிடங்களை அமைத்து வருகிறது இலங்கை அரசு. தமிழர்களோடு சமரசமாகப் போக வேண்டிய அவசியமும்கூட, கடமையும் தங்களுக்கு இருப்பதாக இலங்கை அரசு கருதவில்லை என்பதையே இந்தச் செயல்கள் உணர்த்துகின்றன.இலங்கையில் இப்போது நிலவும் அதிபர் ஆட்சிமுறை என்பதே பெரும்பான்மையினரின் ஆட்சிமுறை என்பதுதான் உண்மை. பெரும்பான்மை சிங்களவரின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே, அமெரிககாவில் பராக் ஒபாமா அதிபரானதுபோல, ஒரு தமிழர் இலங்கையின் அதிபராக முடியும். இப்போது நாடாளுமன்றத்திலும் தமிழர்களும் சிறுபான்மையினரும் குரலெழுப்ப முடியாத நிலைமைக்கு புதிய அரசியல் சட்டத்திருத்தம் வழிகோலப் போகிறது.இத்தனைக்கும்பிறகு இந்திய அரசு இது அன்னிய நாட்டு விவகாரம் என்று தலையிடாமல் தவிர்ப்பது ஏன் என்பதும், அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தயங்குவது ஏன் என்பதும் புதிராக இருக்கிறது. "விடுதலைப் புலிகளைத்தான் எதிர்க்கிறோம். அப்பாவி ஈழத் தமிழர்களை அல்ல' என்று சொன்னதெல்லாம் பொய்தானே?தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.